கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் பொற்செழியன் மகன் பிரதாப், 15; கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 3ம் தேதி, பள்ளி முடிந்து, பிரதாப் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த பிரதாப், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் தாய் பிரவீணாவிடம், பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டதாகவும், அப்போது, உடற்கல்வி ஆசிரியர் ஏன் சீருடை அணியவில்லை எனக் கேட்டு, தலையில் அடித்ததால் வலிப்பதாகவும் பிரதாப் கூறியுள்ளார்.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பிரதாப்பை அனுமதித்து பரிசோதனை செய்ததில், வலது காதில் செவித் திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதிர்ச்சியடைந்த பிரவீணா, தன் மகனை அடித்த உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடலுார் போலீசில் நேற்று, புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி நேரில் சென்று, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின், மாணவரை அடித்ததாக கூறப்படும் உடற்கல்வி ஆசிரியர் கமால் பாஷாவை, ’சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment