மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் அரசு மருத்துவமனைகள், அரசுப் பேருந்துகள், ரயில், விமானம் ஆகியவற்றுக்கான பயணச்சீட்டுகள், பெட்ரோல் நிலையங்கள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள், ஆவின் பால் நிலையம் உள்ளிட்டவற்றில் இந்த நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வரையறுத்துள்ள நிறுவனங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் இடம் பெறாததால், வியாழக்கிழமை (நவ.10) முதல் மின்கட்டணம் வசூலிக்கும் மையங்களில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பெறப்படவில்லை.
கால அவகாசம் நீட்டிப்பு: இந்த நிலையில், நவம்பர் 9 முதல் 30 -ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களின் கால அவகாசம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி மின்கட்டணம் செலுத்துவதற்கு நவம்பர் 9-ஆம் தேதி கடைசியாக இருந்தால் அது நவம்பர் 16 ஆகவும், நவம்பர் 30-ஆம் தேதி கடைசியாக இருந்தால் அது டிசம்பர் 7-ஆம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தத் தவறியவர்கள்: மின்கட்டணம் செலுத்தத் தவறியவர்கள் (நவம்பர் 8 -ஆம் தேதி மின்கட்டணம் செலுத்த கடைசி நாளாக இருப்போர்) நவம்பர் 16 -ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். எனினும் அவர்களுக்கான தாமதக் கட்டணம் மற்றும் மறு இணைப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒப்பந்தப் புள்ளிகள்: மேலும் நவம்பர் 9 -ஆம் தேதி முதல் மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் புள்ளிகளுக்கான வைப்புத் தொகை மற்றும் இதரக் கட்டணங்கள் எதுவும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் கட்டணம்: மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து இணையதளத்தில் மின்கட்டணத்தைச் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தை எளிதில் கட்டணம் செலுத்த முடியும். அதனால் தேவையற்ற காலதாமதத்தைத் தடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment