தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தற்காலிக அங்கீகாரம்
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள எந்தவொரு அடிப்படை தகுதிகளையும் கடை பிடிக்காமல், கடந்த 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கி வருகின்றன.
இறுதியாக கடந்த மே மாதம் 31–ந்தேதி வரை ஒரே ஒருமுறை என்ற அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு பல பள்ளிகள் தேவையான நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.
செயலாளர் ஆஜர்
சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடவும், அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜரானார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ஒரு வகுப்புக்கு எவ்வளவு நிலம் தேவை? என்பது தொடர்பான ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
கால அவகாசம்
பின்னர் அவர், ‘ஒரு வகுப்பிற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை தீர்மானித்து, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 5 பிரிவுகள் வரை உள்ளன. இந்த பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும்? என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழு முன்பு வைத்து, ஒப்புதல் பெற்ற பின் உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.
கல்வியாளர் நியமனம்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
அரசு அமைத்த நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை. அரசு அதிகாரிகள் தான் உள்ளனர். கல்வியாளர்களை நியமித்தால் மட்டுமே குழுவின் நோக்கம் நிறைவேறும். எனவே கல்வியாளர்கள் எஸ்.எல்.சிட்டிபாபு, லலிதா, எஸ்.எஸ்.ராஜகோபால் ஆகியோரை அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் சேர்த்து உத்தரவிடுகிறோம்.
இந்த குழுவில் உள்ளவர்கள், கும்பகோணம் கோர விபத்து சம்பவம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மனதில் வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆலோசிக்கவேண்டும்
நிலம் தொடர்பான விதிமுறைகளை சரியாக கணிக்க வேண்டும். இந்த குழுவில் இடம் பெற்ற நிபுணர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து 4 வாரத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment