அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து (180 நாள்கள்) ஒன்பது மாதங்களாக (270) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவை பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.சுவர்ணா திங்கள்கிழமை வெளியிட்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 90 நாள்களில் இருந்து 180 நாள்களாக ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த விடுப்பு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 -ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்தளித்த அறிக்கையில், அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 6 மாதங்களில் இருந்து (180 நாள்கள்) 9 மாதங்களாக (270 நாள்கள்) உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, கருவுற்றல் தொடங்கி குழந்தை பிறக்கும் வரையில், எந்தக் காலத்தில் 9 மாதங்களுக்கு விடுப்பு தேவைப்படுகிறதோ அதனை பெண் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம். விடுப்பை எந்தக் காலத்தில் இருந்து எடுக்க வேண்டுமென்பதை அந்தந்த அரசு ஊழியர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
விடுப்பில் உள்ளோர்: மகப்பேறு விடுப்பினை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ள காலத்துக்கு முன்னதாக, விடுப்பினை எடுத்து ஓய்வில் இருக்கும் அரசு பெண் ஊழியர்களும் மகப்பேறு விடுப்பினை நீட்டித்துக் கொள்ளத் தகுதி படைத்தவர்கள் என்று தனது உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment