சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான தேர்தல் பணிச் சான்றை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு அலுவலர்கள் வலியுறுத்தினர். வரும் மே16-ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மூன்று நிலைகளில் அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர், கல்வித் துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் வாக்குச் சாவடி அலுவலர்களாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்களிக்க முன்கூட்டியே தேர்தல் பணிச் சான்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் கூறியது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது அனைத்து அலுவலர்களும் முதல் நாள் தேர்தல் பயிற்சி நடந்த அன்றே தேர்தல் பணிச் சான்றுக்கான விண்ணப்பத்தை நிரப்பி அளித்தனர்.
தேர்தலுக்கு முதல் நாள் வாக்குச் சாவடிக்குச் சென்றவுடன், உயர் அலுவலரிடம் பேசி சிலர் தேர்தல் பணிச் சான்றைப் பெற்று வாக்களித்தனர். பெரும்பாலான அலுவலர்களுக்கு கடைசி வரை தேர்தல் பணிச் சான்று வழங்காததால் வாக்களிக்க முடியவில்லை.
பல்வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால், வாக்குச் சாவடியில் பணியாற்றிய அலுவலர்களே வாக்களிக்க முடியாமல் போனது. எனவே, சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்கூட்டியே தேர்தல் பணிச் சான்று வழங்கி வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியது:
இம் முறை வாக்குச் சாவடியில் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலர்களும் வாக்களிக்கும் வகையில் முன்கூட்டியே அதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர், வருவாய்த் துறை உள்ளிட்ட சுமார் 9,000 பேரிடம் வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்பட்டுள்ளது.
ஆவணங்கள் அளித்துள்ள சுமார் 90 சதம் பேருக்கு வாக்களிப்பதற்கான பணிகளைச் செய்து வருகிறோம். எஞ்சியவர்களிடமும் விரைவில் வழங்குமாறு கேட்டுள்ளோம். இம் முறை அனைவருக்கும் முன்கூட்டியே தேர்தல் பணிச் சான்று வழங்கவும், வாக்களிப்பை உறுதிப்படுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment