வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர். இதனை அதிமுகவினர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நாட்டறம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, அவருக்கு வாக்களிக்கக் கோரி திருப்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியதாகத் தெரிகிறது. இதையறிந்த நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்குவதைக் கண்டித்தனர். இதனால் ஆசிரியர் தரப்பினருக்கும், அதிமுகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், வட்டாட்சியருமான ராஜேந்திரனிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் பயிற்சி வகுப்பின் போது இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ஆசிரியர்களை வட்டாட்சியர் எச்சரித்தார். மேலும் அதிமுக நிர்வாகிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment