பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது என அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். வீதி, வீதியாகக் கணக்கெடுப்பு: மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.
இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மாதம் மாவட்ட வாரியாக, பள்ளி செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அந்தப் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இதற்காக தமிழகம் முழுவதும், வீடு, வீடாகச் சென்று, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி அளிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண் குழு அமைக்கப்படுகிறது.
குறையும் எண்ணிக்கை: இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, கணக்கெடுப்பு பணி கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது.
இது குறித்து மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 2013-14-ஆம் ஆண்டில், 50,000 பேர் கண்டறியப்பட்டனர். 2015-16-ஆம் ஆண்டில் 45,000 பேர் கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு, சுமார் 40,000 பேர் வரை பள்ளி செல்லாத குழந்தைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
தொடர் கண்காணிப்பில் குழந்தைகள்: இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகள், சிறப்பு மையங்களில் சேர்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து சாதாரண பள்ளிகளிலும், உண்டு, உறைவிடப் பள்ளிகளிலும் சேர்க்கப்படுகின்றனர்.
இவர்கள் முழுமையாகக் கல்வி பெறுகிறார்களா என்பதும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது. அத்துடன் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்காகத் தனி மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, அதில், குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒருவரின் பெயரே மீண்டும் இடம்பெறுவது தவிர்க்கப்படுகிறது. இந்த கணக்கெடுக்கும் பணி மே மாதம் நிறைவடையும் என்றார் அவர்.
No comments:
Post a Comment