கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி துப்புரவுத் தொழிலாளர்கள் ஊதியமின்றி தவித்து வருவதால், இதுகுறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கழிவறை துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இவர்கள் மாணவர்களது கழிவறைகளை தினந்தோறும் சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை பகுதிநேரமாக செய்துவிட்டு செல்ல வேண்டும்.
துப்புரவுப் பணியாளர்களை, அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்றம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து தேர்ந்தெடுப்பர்.
அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்தால் மாதந்தோறும் ரூ.750, நடுநிலைப் பள்ளிகளில் பணி செய்தால் மாதந்தோறும் ரூ.1000, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் எனில் மாதந்தோறும் ரூ.1250 என தாற்காலிக பணியாக கருதி உதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் முதல் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் அந்தந்த அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படும் எனவும், அதன் பின்னர், அந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு அந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ரொக்கமாகவோ, பணியாளர்களது வங்கிக் கணக்குக்கோ பணப்பரிமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தற்போது பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் இந்நாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லையாம்.
இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.
No comments:
Post a Comment