நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வியை மேம்படுத்த மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
அதேபோல், நாடு முழுவதும் திரட்டப்படும் பள்ளிக் கல்வி விவரங்களை ஒருங்கிணைத்து வழங்குவதற்காக, புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம்.
கல்வி கொள்கையை மேம்படுத்துவதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி) சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வு, இனிமேல் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment