செல்பி மோகத்தால், பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. வாட்ஸ் ஆப்பில், கல்லுாரி மாணவர்களிடையே நடந்த மோதலால், ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கர்வாரே கல்லுாரி மாணவர்கள், வாட்ஸ் ஆப் செயலியில் இணைந்துள்ளனர். இக்கல்லுாரியில் பி.பி.ஏ., படிக்கும் மாணவர், சாங்கேட் சலுாங்கேயின் பிறந்த நாளையொட்டி அந்த குழுவுக்கு, அவருடைய பெயரை, அவருடைய நண்பர் அக் ஷய் தின்கர், சில தினங்களுக்கு முன் சூட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்குழுவில் உள்ள மற்றொரு மாணவர், அந்தப் பெயரை மாற்றினார். இது மாணவர்கள் இடையே, வாட்ஸ் ஆப்பில் செய்தி மோதலாக மாறியது. இந்நிலையில், மறுநாள் கல்லுாரிக்கு வந்த போது மாணவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இறுதியில், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதினர். இதில், உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டதில், தின்கர் பலத்த காயமடைந்தார். மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர்.
புகாரைத் தொடர்ந்து, 22 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment