நாளைய பளுவை நேற்றைய பளுவோடு சேர்த்து இன்று தூக்க முயற்சிக்கும்போது பலசாலியும் தடுமாறுகிறான்! கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்கும் அளவு எவரும் பணக்காரர் ஆக முடியாது. நம்மை முன்னேற முடியாமல் தடுப்பது ’நம்மை கட்டுப்படுத்தும் சுய அவநம்பிக்கை அல்லது சுயசந்தேகம்’ என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.
நமக்குப் பிடித்த லட்சியத்தை நோக்கி நாம் நடைபோடும்போது இடையூறுகள் குறுக்கிடுவது உறுதி. அந்த குறுக்கீடுநம்மிடம் இருந்தேவரலாமா? அதுநியாயமா?
ஏற்கனவே ’முடியாது’ என்று முடிவு செய்துவிட்டால் நமது எண்ணம் ’முடியும்’ நோக்கத்தில் நம்மைச்செயல்பட அனுமதிக்காது. அதுபெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. அடைத்து வைத்த அறையில் காற்று புகுமா? திறந்த அறைக்குள்தான் காற்று வரும். ஒட்டடை, தூசிஉள்ள அறைக்குள் காற்று நுழைந்தாலும் அக்காற்று அசுதமாகத்தானே இருக்கும்? அதுபோல நமது மனதிற்குள் உள்ள பயம், அறியாமை, அவநம்பிக்கை என்கிற தூசி, ஒட்டடைகளைத் துப்பரவு செய்து மன ஜன்னலை விசாலமாகத் திறந்து வைத்தால் ‘முடியும்’ என்கிற நேர்மறை எண்ணங்கலெனும் வசந்தம்வீசத் தொடங்கும்.
இன்றே நம்மால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப்போடக் கூடாது. வெற்றிக்கு இது ஒரு முக்கியமான சூத்திரம்!
நேற்றைய தினம் நல்லதாக இருந்திருந்தால் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். கெட்டதாக இருந்திருந்தால் அனுபவத்தைத் தந்திருக்கும். நமக்கு மகிழ்ச்சி, அனுபவம் இரண்டுமே அவசியம். அப்படி இருக்கும்போது நாளை, கோளை பழித்திடாமல் நம்மை முழுமையாக நம்புதல் அவசியம்.
ஒன்றை நாம் புரிந்து கொள்வோம். எல்லைகளுக்குள் இருக்கிறது நமது உள்ளம். எல்லைகள் இல்லாதது உலகம். நமது வாழ்க்கை சில எல்லைகளுக்குள்தான் வாழப்படுகிறது. வரம்புக்குட்பட்ட வளங்கள், எல்லைக்குள் அடங்கிய திறமைகள், பிறரால் வகுக்கப்படும் எல்லைகள் என இப்படி எத்தனை எல்லைகள்? அதனால் எத்தனை தொல்லைகள்..!
நமது பௌதீகச் சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட எல்லைகள், சமூக சூழலால் வகுக்கப்பட்ட வரம்புகள், நமது திறமையில் இருக்கும் கட்டுப்பாடுகள், இதுதவிர நமக்குநாமே வகுத்துக்கொள்ளும் வரம்புகள், இப்படி எல்லாவற்றையும் கடந்துதான் வெற்றி கிடைக்கிறது. ஏமாற்றம், கோபம், வெறுப்பு என்கிற நிலைக்கு நாம் தள்ளப்படுவது இந்த வரம்புக்குள் வாழத்தெரியாததால் தான். வரம்புகளை எட்டி உதைக்கும் வீண் முயற்சியில் வாழ்நாள் முழுவதையும் கழித்து தன்னிரக்கத்தால் அழுவதை நாம் தவிர்ப்பது மிக மிக அவசியம்.
சரியான முறையில் செய்யப்படும் முயற்சி, எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும் என்பதை நினைவில் கொள்வோம். வாழ்வில் முன்னேறுவோம்!
-முனைவர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment