மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக, உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், ஏ.கே,கோயல் அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு 2016-17-ஆம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை மே 1 மற்றும் ஜூலை 24-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்துவதற்கு பதில் ஜூலை 24-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்வை நடத்தலாம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவில் உரிய மாற்றம் தேவை எனக் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில அரசுகள் தேர்வை நடத்தியிருந்தாலும், தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தாலும் அதனை அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
மேலும், நேற்றைய உத்தரவில் நிறைய குழப்பங்கள் உள்ளதாக அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த புதிய மனுவை இன்று பிற்பகலில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜூலை 24-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேசிய நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியிட்டு செப்டம்பர் 30-க்குள் மாணவர் சேர்க்கை நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இன்று தேசிய நுழைவுத் தேர்வு குறித்த புதிய அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நுழைவுத் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் புதிய தேர்வு அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது. அப்போது, மத்திய அரசின் புதிய மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment