மருத்துவ நுழைவு தேர்வினை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என, பிளஸ் 2 மாணவ மாணவிகள், பெற்றோருடன் கவர்னரை சந்தித்து முறையிட்டனர்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வினை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். மருத்துவ தகுதி நுழைவு தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி ஓரணியில் திரண்டுள்ள மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நேற்று தலைமை செயலகம் சென்ற மாணவ, மாணவிகள் சுகாதார செயலர் சுந்தரவடிவேலுவை சந்தித்து முறையிட சென்றனர். தமிழகத்தின் நடைமுறையே புதுச்சேரி அரசும் பின்பற்றும் என, கூறிய அவர் கோரிக்கை மனுவை வாங்க மறுத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து ராஜ்நிவாஸ் சென்ற மாணவ மாணவிகள் கவர்னர் ஏ.கே.சிங்கை சந்தித்து மருத்துவ நுழைவு தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, முறையிட்டனர். மாணவர்கள் கூறும்போது பிளஸ் 2 தேர்வு முடிந்து 29 நாட்கள் தான் ஆகிறது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள சூழ்நிலையில் முதற்கட்டமாக மே 1ம் தேதி நடக்கும் மருத்துவ நுழைவு தேர்வினை எழுத வேண்டும் என்பது எங்களால் இயலாத காரியம்.
அடுத்தாக இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை 24ம் தேதி நுழைவு தேர்வை சமர்சீர் பாடத்திட்டத்தில் படித்துள்ள எங்களால் எழுத இயலாது. மத்திய அரசிடம் தகுதி நுழைவு தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றனர்.
No comments:
Post a Comment