அரசு பள்ளிகளில், கடந்தாண்டை விட, 10 சதவீதம் வரை, மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும் நாளில் ஆசிரியர், மாணவர் வருகை பதிவை துவக்கும் வகையில், பதிவேடுகளை தயார் செய்ய வேண்டும். பள்ளி திறந்த நாளில், பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, ஆங்கில வழி கல்வி, நலத்திட்ட உதவிகள், கடந்தாண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், மாணவர்களின் சிறப்பான முன்னேற்றம் குறித்து, பெற்றோரிடம் விளக்கி, சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். கடந்தாண்டை காட்டிலும், அரசு பள்ளிகளில், 10 சதவீதம் வரை, சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, அதே பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை நடக்க வேண்டும். குறைந்த மதிப்பெண்ணை காரணம் காட்டி, வேறு பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. புதிதாக பாடப்பிரிவு துவக்கவும், அதற்கென ஆசிரியர் நியமிக்கவும், பெற்றோரிடம் தொகை வசூலிக்கக்கூடாது.
பள்ளியில் நடக்கும் பராமரிப்பு பணிகளில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பெஞ்ச், டெஸ்க் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கரும்பலகைகளுக்கு கருப்பு வர்ணம் பூசவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment