தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான தபால் வாக்கு படிவம்-12 விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் மே 16ல் ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்புக்குழுவினர் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 25 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்கள் அளித்ததும் அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மேற்பார்வையில், ஆய்வாளர் இளங்கோ சென்னிங்ஸ் தலைமையில் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோர் தபால் வாக்கு அளிக்கத் தேவையான முன்னேற்பாட்டு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, தபால் வாக்குப் படிவம்-12 மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை, குற்றப்பிரிவு, மதுவிலக்கு உள்ளிட்ட பிரிவுகளுக்கு பிரித்து விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளன. இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து,வேட்பாளர்கள் பெயர்கள்,சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டு வழங்கப்படும். படிவம் 12 -ஐ பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு அளிக்க முடியும்.
No comments:
Post a Comment