பொதுத்தேர்வில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால், மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்ளும் சம்பவங்களை தடுக்க, பள்ளிகளில் கட்டாயம் உளவியல் ரீதியாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்வின் போதும், தேர்வு முடிவுகள் வெளியிடும் சமயங்களிலும், பல மாவட்டங்களில், தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இந்நிலையை மாற்ற, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் கடந்த இரண்டாண்டுகளாக, நடமாடும் ஆலோசனை மையத்தின் மூலம், தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்தகட்ட முயற்சியாக, சில மாவட்டங்களில் மாணவர்களின் பெற்றோருக்கும் உளவியல் வகுப்புகள் நடத்தப்பட்டன. இருப்பினும், இப்பயிற்சிகள் கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகளை எட்டவில்லை என்றே தான் நிகழும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
உடுமலையில், நேற்று முன்தினம், கணிதத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததென மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் தேர்வு நன்றாக எழுதவில்லை என்ற காரணம் கூறி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக நடந்த சம்பவம் உடுமலையில் பல பெற்றோரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் குழந்தைகளும் இத்தகைய முடிவை தேடிக்கொள்வார்களோ என்ற பயத்தால், தற்போது மாணவர்களிடம் தேர்வு பயத்தை நீக்க முயற்சித்திருப்பர். இருப்பினும், தேர்வுக்கு தயாராகும் போதே மாணவர்கள், இத்தகைய குழப்பங்களுக்கும் ஆளாகின்றனர். இதற்கு, பொதுத்தேர்வு வகுப்புகளில் நுழையும்போதே மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக அரைமணி நேர பயிற்சியாவது அவசியமாகியுள்ளது.
நடமாடும் ஆலோசனை மையம் மற்றும் ஆசிரியர் ஆலோசனை குழு என்ற திட்டங்கள் இருந்தாலும், அதை தொடர்ந்து மாணவர்களை சந்திக்கும் பட்சத்தில் மட்டுமே, மாணவர்கள் இத்தகைய எண்ணங்களிலிருந்து முழுமையாக வெளிவருகின்றனர். தொடர் பயிற்சியால் மட்டுமே மாணவர்களிடம் தன்னம்பிக்கை மேம்படுவதாக உளவியல் நிபுணர்களும் கூறுகின்றனர்.
எனினும் பள்ளிகளில் அப்பயிற்சிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்தினரே முன்வர வேண்டும். புரிந்து விடை எழுதுங்கள், பதற்றமின்றி விடை எழுதுங்கள் போன்ற வழக்கமான வாசகங்கள் மாணவர்களை எப்படியாவது தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தையே விதைக்கிறது. தேர்வில் வெற்றியோ தோல்வியோ, முதலில் அதை எதிர்கொள்ள வேண்டும், தோல்வியடைந்தால் அடுத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு பத்தாம் வகுப்பு முதலிலேேய தன்னம்பிக்கை வகுப்புகள் தனியாக நடத்த, கல்வித்துறை வரும் கல்வியாண்டில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment