புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார். சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.
No comments:
Post a Comment