'வங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் இருப்பு உள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். இரண்டாம் நாளாக, நேற்றும் கூட்டம் குறையவில்லை.வங்கி கவுன்டரில், ஒரு முறை விண்ணப்பிக்கும் போது, 4,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதல் பணம் இருப்பவர்கள், மீண்டும் வரிசையில் நின்று பெற்றுக் கொண்டனர். தபால் நிலையங்களில், பெரும்பாலும், 2,000 ரூபாய் மட்டுமே, ஒருவருக்கு வழங்கப்பட்டது. இதனால், சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், அவதிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி முதன்மை ஆலோசகர், அல்பனா கிலாவாலா வெளியிட்ட அறிவிப்பு: வங்கிகளில் பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, தேவையான அளவுக்கு, ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும், தேவையான அளவுக்கு பணம் உள்ளது. எனவே, பழைய நோட்டு வைத்திருப்பவர்களும், வங்கி கணக்குதாரர்களும், அச்சம் கொள்ள வேண்டாம்; பொறுமையாக மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதியோர், பெண்களுக்கு எஸ்.பி.ஐ.,யில் தனி வரிசை : பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, பெண்களும், முதியோரும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே, அனைத்து பாரத ஸ்டேட் வங்கி கிளைகளிலும், பெண்கள், முதியவர்களுக்கு, தனி வரிசை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 'இன்று முதல், அவர்களுக்கு தனி கவுன்டர்கள் செயல்படும்' என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment