நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில்,
1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன?
பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
4. அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக் கொள்ள முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் தனி ஒரு நபர் ரூ.4,000ஐ மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
5. முழுத் தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாதா?
தற்போதைய திட்டப்படி, முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை.
6. 4 ஆயிரம் ரூபாய் எனக்குப் போதாது என்றால் நான் என்ன செய்வது?
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங்கில் டிரான்சாக்ஷன்களின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
7. வங்கிக் கணக்கு இல்லை என்றால்?
வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகே பணத்தை மாற்ற முடியும்.
8. ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர், வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
9. பணத்தை மாற்றிக் கொள்ள எங்கே செல்ல வேண்டும்?
ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
10. என்னுடைய வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?
ரூ.4 ஆயிரம் வரை பணத்தை மாற்றிக் கொள்ள எந்த வங்கிக் கிளைக்கும், அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ரூ.4 ஆயிரத்துக்கும் மேலான தொகையை மாற்றிக் கொள்ள, வங்கிக் கணக்கில் வரவு வைக்க நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலோ அல்லது வங்கியின் பிற கிளைக்கோ தான் செல்ல வேண்டும்.
11. கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லலாமா?
ஆமாம், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாம்.
12. வேறு வங்கியின் கிளைகளுக்குச் செல்லலாமா?
ஆமாம், எந்த வங்கியின் கிளைகளுக்கும் சென்று ரூ.4000 ஆயிரத்துக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்றால், பழைய ரூபாய் நோட்டுக்களுடன், அடையாள அட்டை மற்றும் உங்கள் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
13. மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.
14. வங்கிக்கு செல்ல முடியாத நிலையில்?
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு செல்ல முடியாத நிலையில், அவரது அனுமதிக் கடிதத்துடன், அவரது பிரநிதிநிதி ஒருவர் வங்கிக்குச் செல்லலாம். வங்கிக்குச் செல்பவரின் அடையாள அட்டையும் அவசியம்.
15. ஏடிஎம்மில் இருந்து நவம்பர் 18ம் தேதி வரை ஒரு நாளுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும். அதன்பிறகு இந்த வரம்பு ரூ.4,000 ஆக உயர்த்தப்படும்.
16. காசோலையை மாற்றி பணம் எடுக்க முடியுமா?
முடியும். காசோலையை வங்கியில் செலுத்தி ஒரு நாளில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரமும், ஒரு வாரத்தில் அதிகபட்சம் ரூ.20 ஆயிரமும் எடுக்கலாம். இது நவம்பர் 24ம் தேதி வரை பொருந்தும்.
17. நெட்பேங்கிங்கில் பணபரிமாற்றம் செய்யலாமா?
என்இஎப்டி / ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.
18. பழைய நோட்டுக்களை மாற்ற எவ்வளவு கால அவகாசம் உள்ளது?
பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர்களுக்கு உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி மேலும் கால அவகாசத்தை நீட்டிக்கும்.
19. நான் இந்தியாவிலேயே இல்லை. என் பணத்தை என்ன செய்வது?
உங்கள் பிரதிநிதியிடம், உங்களின் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்து, வங்கிக்கு அனுப்பி, அவரது அடையாள அட்டையுடன் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
20. என்ஆர்ஐ மக்கள் என்ஆர்ஓ வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்க முடியுமா?
ஆம், ஓஎச்டி வங்கிநோட்டுகள் உங்கள் என்ஆர்ஓ வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும்.
21. சுற்றுலாப் பயணிகள் வைத்திருக்கும் நோட்டுக்களை என்ன செய்வது?
விமான நிலையங்களில் இருக்கும் பணப் பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்துக்குள் கொடுத்து ரூ.5000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓஎச்டி நோட்டுக்களைப் பெற்றதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும்.
22. ஏதேனும் அவசரத் தேவைக்கு என்ன செய்வது?
ஓஎச்டி நோட்டுக்களை வாங்கி, அவற்றை மருத்துவமனை, பேருந்து டிக்கெட்டுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
23. அடையாள அட்டை என்பது என்ன?
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்ட், அரசுத் துறையால் வழங்கப்படும் ஏதேனும் அடையாள அட்டை, பொதுப் பணித் துறை ஊழியராக இருப்பின் ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
24. மேலும் தகவல்களை எங்கு பெறலாம்?
www.rbi.org.in என்ற ஆர்பிஐ இணையதளத்தில் மேலும் தகவல்களைப் பெறலாம்.
25. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உதவிக்கு ஆர்பிஐ தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 022-22602201 / 022 - 22602944.
No comments:
Post a Comment