ஓட்டுப்பதிவன்று வெயிலில்வரிசையில் காத்து நிற்கும்வாக்காளர்கள், சுருண்டு விழாமல் இருக்க, குடிநீர் மற்றும் குளூக்கோஸ் பாக்கெட்டுகளை இலவசமாக வினியோகம் செய்ய, கோவை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நுாறு சதவீத ஓட்டுப்பதிவு எனும் இலக்கை எட்ட, நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
கோவை மாவட்டத்திலுள்ள, பத்து சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட, பகுதிகளில், 2,911 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில், மே 16 ம் தேதி, காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, உணவு இடைவேளை இல்லாமல், ஓட்டுப்பதிவு நடைபெறும்.
ஓட்டுச்சாவடிக்கு காலை, 11:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை வெயிலில் வரும் வாக்காளர்கள், வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள், வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழாமல் இருப்பதற்கும், மாவட்ட நிர்வாகம், குளூக்கோஸ் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகளை, வழங்க முடிவு செய்துள்ளது.வெயிலில் வாடி வதங்கி, சோர்வுடன் வரும், வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்க, 30 கிராம் (2 டீ ஸ்பூன் ) அளவு கொண்ட குளூக்கோஸ் பாக்கெட்டுகள், 200 மி.லி., லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது.
இது பற்றி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மே மாதத்தில் வழக்கமாக, 38 டிகிரி வெப்பமே, அதிக அளவாக கருதப்படும். வழக்கத்தை காட்டிலும் அதிகமாக, இந்த ஆண்டு வெயில் அடிக்கலாம். அதனால் பாதிப்புகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் இது போன்ற முன்னெச்சரிக்கை பணிகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இப்பொருட்கள் முழுக்க, முழுக்க அரசால் நேரடியாக தயாரிக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளது. மிதமான சீதோஷ்ணத்தில் வாழ்ந்து வரும், கோவை மக்களில், எல்லோராலும் அதிக வெப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்கள் ஓட்டுப்பதிவன்று வரிசையில் காத்து நிற்கும்போது, உடல் உபாதை ஏற்படாமல் இருப்பதற்காகவும், நுாறு சதவீதம் வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்ற இலக்கை அடையவும், மாவட்ட நிர்வாகம் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
No comments:
Post a Comment