* கல்வி, விவசாய கடன் ரத்து
* ஆவின் பால் விலை குறைப்பு
* ஒன்பது மாத பேறுகால விடுப்பு
* விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
* மாணவர்களுக்கு இலவச வைபை
* ஏழைகளுக்கு அண்ணா உணவகம்
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும். அதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளுக்கு பயிர்கடன், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குறித்த அறிவிப்பால் ஒவ்வொரு வீடுகளுக்கும் மின் கட்டணம் பாதியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மொத்தம் 141 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார். பொதுச்செயலாளர் அன்பழகன் அதை பெற்றுக்கொண்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
தேர்தல் அறிக்கையில், பெண்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்த பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும். டாஸ்மாக் கலைக்கப்பட்டு, மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும், மாநில ஒருங்கிணைந்த ஒழுங்கு முறை விற்பனை வாரியம் என்ற புதிய வாரியத்தில் பதவி மூப்பினை இழக்காமல் பணியாற்ற வழி வகை செய்யப்படும். இந்த வாரியம் மூலம் புதிய சந்தைகள் உருவாக்கப்பட்டு விவசாயம், நெசவு பொருட்களை விற்பனை செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும். அரசு பெண் ஊழியர்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பு, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மாணவர்களுக்கு இலவச வைபை, ஏழைகளுக்கு அண்ணா உணவகம், அனைத்து ரக நெல்லுக்கும் முழு மானியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பின் மூலம் 27 ஆண்டுகள் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதன் மூலம் விவசாயம் மீண்டும் பெருகுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் 200 தடுப்பணைகள் அமைக்கப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்; தனி ஜவுளி ஆணையம்; தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் கூடுதலாக பால் வழங்குதல்; 25 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு தனி சிறப்பு நிதிவழங்கி, ஊக்க ஊதியம் வழங்கப்படும். முதியோர் உதவித் தொகை உயர்வு; கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் காப்பீடு; திருச்சி, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; கிராம கோயில் பூசாரிகளுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஏராளமான அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையினால் ஒவ்வொரு வீட்டிலும் மின் கட்டணம் பாதியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்தால், மின் கட்டணம் பாதியாக குறையும். தற்போது மின் கட்டணம் ஒரு யூனிட் முதல் 100 யூனிட் வரை வந்தால் ஒரு ரூபாய் கட்டணம். ஒரு யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 வசூலிக்கப்படும். ரூ.200 யூனிட்டுக்கு மேல் 500 யூனிட் வரை பயன்படுத்துகிறவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.3 வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மேலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயன்படுத்தும் யூனிட்டின் அளவு அதிகரித்து, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பயன்படுத்தும் யூனிட்கள் அளவு குறைந்துவிடும். மின் கட்டணமும் பாதியாக குறையும். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ரூ.200 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்படும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாகும். மீட்டர் கணக்கெடுக்கும் பணியாளரே மின்கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தென்னை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழா முடிவில் முதன்மை செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு, உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ெஜகதீசன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பேராசிரியர் ராமசாமி, வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி பட்டு ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment