கேரளாவில், கல்லுாரியில் முதல்வராக பணியாற்றி, ஓய்வு பெற்றவருக்கு, மாதிரி கல்லறை எழுப்பி, மலர் அஞ்சலி செலுத்திய மாணவர்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள இம்மாநிலத்தின் பாலக்காடு நகரில், 127 ஆண்டு பாரம்பரியம் உடைய அரசு விக்டோரியா கல்லுாரி உள்ளது.
இங்கு, விலங்கியல் பிரிவு பேராசிரியராக, 27 ஆண்டுகளாக பணியாற்றி, 2015 - 16ம் கல்வியாண்டில், முதல்வராக பொறுப்பேற்றவர், டி.என்.சரசு.
இவர், மார்ச், 31ல், பணி ஓய்வு பெற்றார். இதை ஒட்டி, அன்று காலை, 7:00 மணிக்கு, கல்லுாரி வளாகத்தில், அவருக்கு, மாதிரி கல்லறை எழுப்பிய மாணவர்கள், அதற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சரசு கூறுகையில், மாணவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால், என் மீது கோபம் கொண்டு அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர், எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இந்திய மாணவர் சம்மேளனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment