ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுார் பள்ளியில் 17 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு பிப்ரவரி, மார்ச் சம்பளம் வழங்கவில்லை. தலைமை ஆசிரியர் லுார்து ஜோஸ்பின், சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.
நேற்று, சம்பளம் கிடைக்காத ஆசிரியர்கள் ஆடவல்லான், ரத்தினவேலு, அபிமன்னன், அம்பிகா, பொன்னீஸ்வரி, பாலமுருகன், தவ்பிக்ரஹ்மான் ஆகியோரும், இவர்களுக்கு ஆதரவாக மேலும் ஐந்து பேரும் தலைமை ஆசிரியரின் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர்கள் கூறியது: வருமானவரி படிவம் தாக்கல் செய்யாததால் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் கூறுகிறார். ஆனால் அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிட்டோம். வீட்டு வாடகை ரசீதுடன், வீட்டு உரிமையாளரின் 'பான் எண்' கேட்கிறார். ஆண்டு வாடகை ரூ.1 லட்சத்துக்கு மேல் என்றால்தான் 'பான் எண்' கொடுக்க வேண்டும்.
வருமான வரித்துறை விதிகளை காட்டியும் ஏற்க மறுக்கிறார். ''வீட்டுக்கடன் வட்டியும் செல்லாது,'' என கூறுகிறார். பிப்.,1ல் தற்செயல் விடுப்பு எடுத்த மூன்று ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்கிறார். கல்வித்துறை அதிகாரிகள் கூறியும் சம்பளம் தர மறுப்பதால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம், என்றனர்.
தலைமை ஆசிரியர் கூறுகையில், ''ஆசிரியர்கள் வீட்டு வாடகை ரசீதுடன் உரிமையாளரின் 'பான் எண்' கண்டிப்பாக கொடுக்க வேண்டும். வீட்டு கடன் வட்டி
ஆவணங்களை ஏப்ரல் வரை கொடுப்பதை ஏற்க முடியாது. இவற்றை நிவர்த்தி செய்தால் உடனடியாக சம்பளம் பெறலாம்,'' என்றார்.
முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறுகையில், ''பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவின்படி மூத்த முதுநிலை ஆசிரியர் ஆடவல்லானுக்கு சம்பள பட்டியலில் கையெழுத்திட அனுமதி உள்ளது. ஏழு ஆசிரியர்களுக்கும் இன்றே சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment