ஊதிய ஒப்பந்த பேச்சை தமிழக அரசு துவக்காததால், அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டத்துக்கு தயாராகின்றன. சென்னையில், நாளை நடக்கும், அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 1.55 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்தம் போடப்படும். 13வது ஊதிய ஒப்பந்தத்தை, செப்., 1ல், அமல்படுத்த வேண்டும்.
இதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன், ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஊதிய ஒப்பந்த பேச்சுக்கான எந்த அறிகுறியும், அரசு தரப்பில் இருந்து கிடைக்காததால், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தியில் உள்ளன. அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் முடிவுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, அரசு போக்கு வரத்து கழக, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுக நயினார் கூறியதாவது: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், செப்., மாதத்துடன் முடிவடைந்து விட்டது. 13வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்து, அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதற்கான பேச்சை, அரசு இன்னும் துவங்காமல் உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், அரசிடம் இருந்து அழைப்பு வரும் என, எதிர்பார்த்தோம்; ஆனால், அதற்கான அறிகுறியே தென்படவில்லை. எனவே, போராட்டங்களை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதுபற்றி விவாதிக்க, அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், நாளை, சென்னையில் நடக்கிறது. இதில், எந்த மாதிரியான போராட்டங்களை நடத்தவது என, முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொ.மு.ச.,வைச் சேர்ந்த, வேலுார் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஊதிய ஒப்பந்த பேச்சை, அரசு உடனே துவக்க வேண்டும்; இல்லாவிட்டால், வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்' என்றார்.
ஊழியர்கள் எதிர்பார்ப்பு என்ன? :
போக்குவரத்து ஊழியர்களுக்கு, 11வது ஊதிய ஒப்பந்தத்தில், 38 சதவீதம் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையால், பணியாளர்களின் அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டது, இன்னும் சரி செய்யப்பட வில்லை12வது ஒப்பந்த பேச்சின் போது, 'தற்போது, 5.5 சதவீத ஊதிய உயர்வு தரப்படும்; அடுத்த ஊதிய ஒப்பந்தத்தில், மத்திய அரசின் பரிந்துரைக்கு ஏற்ப வழங்கப்படும்' என, நிதித்துறை கூடுதல் செயலர் உமாநாத் தெரிவித்து இருந்தார்; இதில், 20 சதவீதம் நிலுவைத்தொகை இன்னும் கிடைக்கவில்லைதற்போது, மத்திய அரசின் சம்பள கமிஷன், 23.55 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதையெல்லாம் சரி செய்யும் வகையில், ஊதிய உயர்வு பேச்சு நடக்கும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment