அதிகாலையில் எழுந்து படித்தால் மனது தெளிவாக இருப்பதோடு கவனச்சிதறல் ஏற்படாது, என்று ராமநாதபுரத்தில் நடந்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம், நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். ராமநாதபுரத்தில் நேற்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.வி.ஆர்.அகாடமி சார்பில், தினமலர் கல்விமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது.
பொதுத் தேர்வில் வெற்றி பெறுவது, அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்கள் பேசியதாவது: பி.ஆலிஸ் ஞான தங்க புஷ்பம், ஆங்கிலம், அரசு உயர்நிலைப்பள்ளி, தொருவளூர்:
தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் உழைத்தால் மாணவர்கள் ஜெயித்து காட்டலாம். சமச்சீர் கல்வி வந்த பின் ஆங்கிலத்தில் சென்டம் எடுப்பது எளிதாகிவிட்டது. அதற்கு நம்பிக்கையுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும்.
அதிகாலையில் எழுந்து படித்தால் மனது தெளிவாக இருப்பதுடன் கவனச்சிதறலும் ஏற்படாது. படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். டி.வி., பார்ப்பது, அலைபேசியில் விளையாடுவதை கைவிடுங்கள். கிராமர் பகுதியை புரிந்து படித்தால் எளிதில் மதிப்பெண் பெறலாம்.
எல்லா வினாக்களையும் எழுத வேண்டும். பேராகிராப் கேள்விக்கு முதல் மூன்று யூனிட் படித்தால் போதும். 2 மார்க் கேள்விக்கு ஏதாவது ஐந்து யூனிட் படித்தால் போதுமானது.
ஏ.ஜஸ்டின், கணிதம், அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்:
கடந்த 1994 அரசு பொதுத் தேர்வில் முதன்முறையாக மாணவர்கள் அதிகளவு கணிதத்தில் சென்டம் எடுப்பதற்கு உறுதுணையாக இருந்தது தினமலர் நாளிதழ். அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும். அப்போது, தினமலர் நாளிதழில் வெளியான ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை படித்து அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
ஒரு மதிப்பெண் கேள்விகளில் பாடம் 2, 3, 5,6,7 படித்தால் 10 மார்க் பெறலாம். 2 மதிப்பெண் கேள்விக்கு 1, 4, 5,7, 11, 12 படித்தால் 10 இரண்டு மதிப்பெண் கேள்விகள் எழுதலாம். தொடுகோடு, முக்கோணம் வரைதலை படித்தால் 10 மதிப்பெண் பெறலாம்.
சிறப்பு வரைபடம் ஒன்பது கேள்விகளில் ஒன்று நிச்சயம் வரும். இதனை படித்தால் 10 மதிப்பெண் பெறலாம். ஐந்து மார்க் கேள்வியில் அரசு பொதுத் தேர்வு வினாக்கள், கட்டாய வினாவிற்கு ஒவ்வொரு பாடத்திலும் கடைசி பயிற்சியை படிக்க வேண்டும்.
பி.வி.அமுதா, அறிவியல், சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி:
அறிவியலில் 17 பாடங்கள் உள்ளன. செய்முறை தேர்வில் 25 மதிப்பெண் போக 75 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதில் ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளை முழுமையாக படித்தாலே 40 மதிப்பெண் எடுப்பது மிக எளிது.
இதற்கு புத்தகத்தின் பின் பகுதி கேள்விகளை படித்தாலே போதும். அதிக மதிப்பெண் எடுக்க பாடம் 2,3,4,7,10, 13, 15,17 ஆகிய எட்டு பாடங்களில் ஐந்து மதிப்பெண் கேள்விகளை படித்தால் போதும். இந்த பாடங்களில் 108 கேள்விகளை படிக்க வேண்டும்.
இதில் 2, 3ம் பாடங்களில் தலா ஒரு கேள்வி, 4 மற்றும் 7ல் இருந்து தலா ஒரு கேள்வி இருக்கும். இயற்பியலில் 15, 17ம் பாடத்தில் தலா ஒரு கேள்வி வரும். ஐந்து மதிப்பெண் கேள்விகள் இடம்பெறாத பாடங்களான 1,5,6,9, 11,12,16ல் இருந்து புத்தகத்தில் இருந்து 15 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். இதனை படித்தால் 15 மதிப்பெண் பெறுவது எளிது.
எஸ்.காசிவிஸ்வநாதன்,சமூக அறிவியல், அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்கோவில்:
புத்தக பின்பக்க கேள்விகளை படித்தால் 24 ஒரு மதிப்பெண் கேள்விகள் எழுதலாம். வரலாறில் முதல் 10 பாடங்களில் 2 மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் படிக்க வேண்டும்.
குடிமையியலில் முதல் இரண்டு பாடங்கள், புவியியலில் முதல் ஐந்து பாடங்கள், வேறு படுத்தி காட்டுக, இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் படிக்க வேண்டும். பொருளியலில் ஏதாவது ஒரு பாடம் படிக்கலாம். வரைபட பயிற்சி ஏற்கனவே பொதுத் தேர்வில் கேட்கப்பட்டதையே பயிற்சி பெறலாம்.
முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட வேண்டும்.
டி.கே.ஜெயபிரகாஷ், தன்னம்பிக்கை, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி:
மாணவர்கள் யாரும் தங்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்லை. எல்லா மாணவர்களிடமும் திறமை உள்ளது. எல்லா மாணவர்களும் சாதனை மாணவர்கள்தான். சாதாரண மாணவர் அல்ல. சாதிக்க பிறந்தவர்கள். சவால்களை எதிர்கொள்பவராக சாதனை மாணவர்கள் இருக்க வேண்டும்.
அதற்கு திட்டமிடலும், இடைவிடாத உழைப்பும் இருக்க வேண்டும். மாணவர்களின் மந்திர சொல் ஒன்றே வேதச்சொல்லாக இருக்க வேண்டும். அந்த முயற்சியானது பயிற்சியால் தான் வரும். முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை.மாணவர்கள் மனதை கண்ணாடி போல் வைக்க வேண்டும்.
காலையில் எழுந்து படிக்க வேண்டும் என்பது முயற்சி. படித்ததை எழுதிப் பார்ப்பது பயிற்சி. இந்த முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எல்லோரும் ஜெயித்துக்காட்டுவோம். இவ்வாறு பேசினர்.
பாடத்தை தேர்வு செய்து படித்தால் அதிக மதிப்பெண்கள் அள்ளலாம்
பிளஸ் 2 :
எம்.பாலமுருகன், ஆங்கிலம், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்:
தேர்வுக்கு இது வரை தயாராகாதவர்கள் இன்று முதல் தினமும் படித்தால் 140 மதிப்பெண்கள் எடுக்கலாம். கட்டுரை, சிறு கட்டுரை வினாக்களுக்கு மட்டும் கைடுகளை பயன்படுத்துங்கள், அதிக மதிப்பெண் பெற பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.
எம்.எஸ்.செந்தில்குமார், கணிதம், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்:
அத்தியாயம் 2, 4 ஐ முழுமையாக படித்தால் தேர்ச்சி பெறலாம். 6, 10 மதிப்பெண் வினாக்களுக்கு அத்தியாயம் 1, 2, 3, 6, 9, 10, படித்து விடை எழுதி பழக வேண்டும். தொகுப்பு 1ல் 121 , தொகுப்பு 2ல் 150 வீதம் 271 வினாக்களுக்கு விடை படித்தால் 30 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்கலாம். பெற்றோர் ஆசிரியர் சங்க வழிகாட்டி புத்தகத்தை படித்தால் 200 மதிப்பெண் எடுக்கலாம்.
வி.வைத்தியநாதன், இயற்பியல், செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் :
கேள்விகளை தேர்வு செய்யாமல் பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். விதிகள், வரையறைகள், வேறுபாடுகளை, தத்துவங்கள், பண்புகளை சரியாக படித்து எழுதி பார்க்க வேண்டும். கட்டாய வினாவுக்கு விடையளிக்க எடுத்து காட்டு அல்லது பயிற்சி கணக்குகளை செய்து பழக வேண்டும்.
வாரத்திற்கு 3 மதிப்பெண் 3 வினா, 5 மதிப்பெண் 5 வினா, 10 மதிப்பெண் 3 வினாக்களுக்கு விடை படித்தால் 140 மதிப்பெண் எடுத்துவிடலாம்.
எச்.சுந்தர், வேதியியல், அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம்:
அத்தியாயம் 5, 7, 89, 10, 22 பாடங்களை படித்தால் 53 மதிப்பெண் எடுத்து சராசரி மாணவர் தேர்ச்சி பெறலாம். 3 மதிப்பெண் வினாக்களுக்கு அத்தியாயம் 1-14, 16, 18, 5 மதிப்பெண் வினாக்களுக்கு அத்தியாயம் 1, 5, 6, 9, 10, 11, 17, 22 படிக்க வேண்டும். கட்டாய வினா விடைக்கு அத்தியாயம் 4, 16, 18, 13 படிக்க வேண்டும்.
அத்தியாயம் 1, 4, 5, 9, 10, 12, 17, 20, 21ல் பாட புத்தக உள்பகுதி, 2, 3, 6, 7, 8, 11, 13, 16, 18, 19 பாட புத்தக வெளி பகுதியில் இருந்து ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படும். தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இரவு 9:00 மணிமுதல் 10:00 மணி வரை, அதிகாலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை படிக்க வேண்டும்.
பிளஸ் 2 மாணவர் பேட்டி
எஸ்.ராமசுரேஷ், அரசு மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி:
கடின பாடங்களான ஆங்கிலம், கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது குறித்து தெரிந்து கொள்ள தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி உதவியது. தேர்வு பயம் போக்க தன்னம்பிக்கை பேச்சு பயனுள்ளதாக இருந்தது. பொதுத்தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுக்கலாம் என்ற நம்பிக்கை கிடைத்தது.
எஸ்.யாப்ரின், அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கல்:
வாழ்க்கையின் எதிர்கால கல்வியை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்ற அதீத நம்பிக்கை கிடைத்தது. தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் எஞ்சிய நேரத்தில் எப்படி திட்டமிட்டு படிக்கலாம் என்ற புதிய ஆலோசனை கிடைத்தது.
தமிழகத்தில் முதலிடம் பிடிப்பேன்
ஆர்.தருண், பேர்ல் மெட்ரிக் பள்ளி, கீழக்கரை:
வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வருகிறேன். தேர்வில் ஏற்படும் பல குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைத்தது. வரும் பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று தினமலர் நாளிதழுக்கு நன்றி சொல்ல நிச்சயம் வருவேன்.
பி.ஆனந்தலட்சுமி, சுவார்ட்ஸ் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:
எப்படி பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை, தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகளை ஆசிரியர்கள் தெளிவு படுத்தினர்.
எம்.ஜமுனா, ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை:
வகுப்பு சூழல் இல்லாத நிலையில், வெவ்வேறு பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்காக நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்வேன்.
No comments:
Post a Comment