ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் இடம்பெற்ற மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ் டூ, பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் 423 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை இம்மாத தொடக்கத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
அப்போது, நீதிபதிகள் தமிழக அரசு தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். இதன்படி, தமிழக அரசு தரப்பில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வ வாதங்கள் அடங்கிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை. நடைமுறை விதிகள் எதுவும் மீறப்படவில்லை. எனவே, மனுதாரர்களின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment