வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறி வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: - தற்போது சென்னையில் இருந்து இலங்கையை தாண்டி 1000 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் சின்னமானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த கட்டமாக இது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் சின்னமானது நாளை (திங்கட்கிழமை) கடலூரை தாக்கும். அதன் பிறகு திசை மாறி வந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சென்னை நகரை தாக்கும். அப்போது அளவுக்கு அதிகமான மிதமிஞ்சிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் தமிழகத்தை நெருங்குவதால் நாளை (15–ந்தேதி) முதல் 18–ந்தேதி வரை 3 நாட்களுக்கு கடுமையான மழை பொழிவு இருக்கும் என்று சென்னை தேசிய பேரிடர் மேலாண்மை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, கடலூர் மட்டுமல்லாது புதுவையிலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இன்று 8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment