'நாட்டிலேயே முதலிடம் வகிக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், குழந்தைகள் தின விழா, எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில், நேற்று நடந்தது. துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்றார்.
விழாவிற்கு தலைமை தாங்கிய, துறையின் முதன்மை செயலர் சபீதா பேசியதாவது: தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாயை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். தேசிய விதிமுறைப்படி தொடக்கப் பள்ளியில், 30 மாணவர்; நடுநிலைப் பள்ளியில், 35; உயர்நிலைப் பள்ளியில், 40; மேல்நிலைப் பள்ளியில், 45 பேருக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், 22 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில், தமிழகம் முதலிடத்தில் இருக்க இதுவே காரணம்.போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால், பள்ளிக்கு செல்லாமல் இருந்த, 57 ஆயிரம் குழந்தைகளில், 48 ஆயிரம் பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
துறை அமைச்சர் வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சிறந்த நுாலகர்களுக்கு எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கி பேசினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
No comments:
Post a Comment