'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.
கடந்த, 2010ல், 'அடிப்படை கட்டமைப்பு வசதியற்ற, 44 நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டாண்டன் குழு பரிந்துரைத்தது. இது தொடர்பான வழக்கில், மூன்று பல்கலைகள் நீங்கலாக, 41 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து அறிக்கை தர, பல்கலை கழக மானியக் குழுவிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதில், மூன்று பல்கலைகள் அங்கீகாரம் பெற்றன.
எஞ்சிய, 38 நிகர்நிலை பல்கலைகளை ஆய்வு செய்து, புதிய தரப் பட்டியலை வழங்கும்படி, என்.ஏ.ஏ.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஏ.ஏ.சி., தரப்பில், 38 பல்கலைகளை ஆய்வு செய்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் விவரம்: கடந்த, 2012ம் ஆண்டு, என்.ஏ.ஏ.சி., ஒழுங்குமுறை விதிகளின்படி, 38 நிகர்நிலை பல்கலைகளும் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்திகரமாக உள்ளது தெரியவந்துள்ளது. அதனால், இந்த நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து இயங்கலாம். மேலும், இந்த பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அது, இணையத்திலும் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தர வரிசைப் பட்டியல் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை நிகர்நிலை பல்கலைகள் தெரிவிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை, 2016, ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.
இதன் மூலம், ஐந்து ஆண்டுகளாக தங்களின் எதிர்காலம் குறித்து, பரிதவித்து வந்த, 2 லட்சம் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment