சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. முதல்நாளில் வந்த பெரும்பாலான மாணவர்களுக்கு பாடங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டதாகவும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகள், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பள்ளிகளுக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், 29 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உதவிகள் ஓரிரு நாள்களில் மீண்டும் வழங்கப்பட உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி மழைநீர் தேங்கியிருந்த பள்ளி வளாகங்களில் கொசுமருந்தும் அடிக்கப்பட்டது. கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 29 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை ஓரிரு நாளில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களும், 7,500 மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வியாழக்கிழமைதான் திறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஓரிரு நாள்களில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரையாண்டுத் தேர்வு எப்போது? பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறுமா அல்லது வேறு தேதிகளில் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 24 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகளைத் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகளைத் திறக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, காய்ச்சிய குடிநீர், மழைகோட் அல்லது குடை ஆகியவற்றை மாணவர்கள் எடுத்துவருமாறு பெற்றோர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியிருந்தன.
No comments:
Post a Comment