மத்திய அரசின் 'ஒரே கல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு ஆசிரியர்கள்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய திட்டத்தில், குற்றம் புரியும் ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே,
'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?' என்பதை மக்களே தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் உள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்தில் 'ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம்' அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான திட்டம் வகுத்து, மாநிலங்களில் கருத்துக்கேட்புகூட்டங்களை நடத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் 21 லட்சம் இடங்களில் சிறப்பு கருத்துக்கேட்பு முகாம்கள் நடந்து வருகின்றன.மதுரை, கோவை, சென்னையில் மட்டுமே கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடந்தன. கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாநில அரசு அதிகாரிகளை வைத்தே மத்திய அரசு நடத்தி விட்டது. தமிழக, கேரள மாநிலங்களில் இக்கூட்டங்களில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் சொந்த மாவட்டம் சார்ந்த வரலாறு இடம் பெறாமல் போவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.
இதுமாதிரியான 13 அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது, எனக்கூறி, தமிழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மோசஸ் கூறியதாவது: தவறுகள் இழைக்கும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் தண்டிக்கும் அதிகாரத்தை கிராம நிர்வாகத்தின் கைகளில் திணிப்பது ஏற்புடையது அல்ல.ஆரம்பக் கல்வியில் மாவட்டத்தின் வரலாறே இல்லாத வகையில் பாடத்திட்டம் அமைய இருப்பது, அடிப்படை கல்வியே ஆட்டம் காண வைப்பதாகும். இதற்கு எதிராக டிச., 8ல் இந்திய பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழக கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி, கலெக்டர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment