அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.
10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலைகுனிவை ஏற்படுத்தியது. அதனால், இந்த ஆண்டு தேர்வுகளில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளிகள் தேர்ச்சியும், மதிப்பெண்ணும் பெற வேண்டும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும், உறுதி எடுத்துள்ளனர்.
அதன்படி, தனியார் பள்ளிகளைப் போல், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, அவர்களுக்கு மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும், அரையாண்டுத் தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் முடிக்க வேண்டும் என, கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுக்குப் பின், பிப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதில் மாணவ, மாணவியர், மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றனர்.
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, மாநில ரேங்க் பெறுவது குறித்தும்; சராசரி மாணவர்களுக்கு, 80 சதவீத மதிப்பெண் பெறுவது குறித்தும்; தேர்ச்சிக்கே தடுமாறும் மாணவர்களுக்கு, எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தேர்ச்சி அடையலாம் என்பது குறித்தும், மூன்று வகைகளில் பயிற்சி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment