தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின் நவம்பர் 8-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.
முதல்வரின் உத்தரவுப்படி பாதிக்கப்பட்டமாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்படுவதுடன் வெள்ளச் சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளச் சேத நிவாரணம் மற்றும் சீரமைப்புகளுக்கான தேவை முதற்கட்டமாக 8,481 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை மாநில அரசுக்கு வழங்கப்படவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை இன்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக உடனடியாக 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவின் கடிதமும், வெள்ளச் சேத அறிக்கையும் பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை அளிக்கப்பட்டது.
கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு உடனடி நிதி உதவியாக 939.63 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க விரைவில் மத்திய ஆய்வுக் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment