திருப்பூரில் வரும் 27ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான (இருபாலருக்கும்) விளையாட்டுப் போட்டிகள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், 100, 200, 800, 1,500 மீ., ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும், பூப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து ஆகிய குழு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தவிர, அனைத்து துறை அரசு அலுவலக ஊழியர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். பணியில் சேர்ந்து ஆறு மாதத்துக்கு உள்பட்டவர்கள், ஒப்பந்த மற்றும் தினக்கூலி பணியாளர்கள் பங்கேற்க முடியாது.
வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும்.
தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் முதலிடம் பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு 0421-2244899 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment