கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்–்ளுர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இருப்பினும் மழை நீர் சூழ்ந்த பள்ளிகள் இயங்காது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து லேசான அளவுக்கே மழை இருந்தது. எனினும், தீபாவளிக்கு முன்னதாக 7ம் தேதியில் இருந்தே பலத்த மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இதனால், கடந்த 9ம் தேதி வேலை நாளாக இருந்தும் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. 10ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இ ருந்தது.
அதனால் அடுத்தடுத்த நாட்களிலும் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்தனர். இந்நிலையில், 23ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால், அந்த நாளில் மழை பெய்யும் என்று அறிவித்ததை அடுத்து 23ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியாமல் உள்ளதால், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை குறையும் பட்சத்தில் பள்ளிகள் திறக்க வேண்டிய நிலை உள்ளதால், அங்கு தங்கியுள்ள மக்களை சமூக நலக்கூடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.
குறிப்பிட்ட சில பள்ளிகளில் குறைந்த அளவில் தங்கியுள்ள மக்களுக்கு அந்த பள்ளிகளில் சில வகுப்பறைகளை மட்டும் ஒதுக்கிவிட்டு, மற்ற அறைகளில் பாடம் நடத்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இருப்பினும் 10 சதவீத பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அவற்றை தவிர 90 சதவீத பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 425, உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் 308 உள்ளன.
உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் 18, தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் 13 ஆகியவற்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பொதுப்பணித்துறை மூலம் வெள்ள நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மழைநீர் சூழ்ந்த 11 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறந்தாலும் மழை வெள்ளம் சூழ்ந்த பள்ளி வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும். பள்ளிக்கு வரும் மாணவர்களை நோய்க் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் உடமைகளை இழந்துள்ள நிலையில் அந்த குழந்தைகள் பள்ளிக்கு வருவது கடினம். அதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment