சுதந்திரத்துக்கு பின்னர் நமது நாட்டில் நடைபெற்றுவரும் தேர்தல்களில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மைக்கு பதிலாக நவீன மார்க்கர்களின் மூலம் அடையாளம் பதிக்கும் புதிய நடைமுறை பற்றி மத்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகின்றது.
கடந்த 1962-ம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ‘மைசூர் பெயிண்ட்ஸ்’ நிறுவனம்தான் பாராளுமன்ற தேர்தல், மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அடையாள மையை அனுப்பி வருகின்றது. பாட்டிலில் இருந்து பஞ்சால் சுற்றப்பட்ட குச்சிமூலம் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் இந்த மையானது.., சில வேளைகளில் விரல் முழுவதும் வழிந்து, விகாரமாக காட்சியளிப்பதாக இளையதலைமுறையினரிடம் இருந்து தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ‘மைசூர் பெயிண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்த நவீன மார்க்கர் பேனாக்களால் அடையாள மையை பதிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது.
இந்த மார்க்கர்களின் மூலம் பதிக்கப்பட்ட அடையாளம் அழியாமல் நீடித்ததை தொடர்ந்து இந்தியாவிலும் தேர்தல்களின்போது இதுபோன்ற மார்க்கர்களை பயன்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், வாக்குச்சாவடிகளுக்கு மை பாட்டில்களை அனுப்பும்போது அவற்றில் சில உடைவது போன்ற அசம்பாவிதங்களும், மையில் கலப்படம் போன்ற விபரீதங்களும் தடுக்கப்படும். கையடக்கமான மார்க்கர்களால் நகக்கண்ணுக்கு கீழே ஒழுகாத வகையில் சிறிய புள்ளியாக அழியாத அடையாள மையை வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment