தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைய அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்குச் சுழற்சியானது, வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இது, தென்கிழக்கு வங்க கடல், அதை ஒட்டிய பகுதியில் மேலடுக்குச் சுழற்சியாகவே நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறினால், கடலோர மாவட்டங்களில் சனி, ஞாயிறு (நவ 28-29) ஆகிய இரண்டு நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் வாய்ப்புண்டு.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மிகவும் பலத்த மழை இருக்கும். இந்தப் பகுதிகளில், அதிகப்பட்சமாக 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புண்டு.
மழை நிலவரம்(மி.மீட்டரில்): கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 70 மி.மீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 40 மி.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment