ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வித்தரத்தைப் பொருத்தே அமைகிறது. இதனை உலக வங்கி, "2000-ஆம் ஆண்டின் நலிவும் நம்பிக்கையும்' என்னும் தன்னுடைய ஆண்டறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தவிர்க்க முடியாத தேவை உயர்கல்வி என்றும், வளர்ந்த இந்தியா உருவாக அறிவார்ந்த சமுதாய வளர்ச்சியே முதல் தேவை என்றும் கூறுகிறார் நமது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம்.
இந்தியா 2020-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் வல்லரசு நாடாக மலரும் என்று அப்துல் கலாம் கூறிவருகிறார். அவ்வாறு இந்த நாடு ஒரு வளமான, பொருளாதாரத்தில் வலிமையான நாடாக வளர வேண்டுமென்றால் அதற்கு அடிப்படைத் தேவை உயர்கல்வி.
இன்றைக்கு பள்ளிப் படிப்பை முடித்த- உயர்கல்வி பயிலத் தகுதியுள்ளவர்களில் 13 சதவீதத்தினர் மட்டுமே உயர்கல்வி பெற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சேருகிறார்கள்.
அவர்களுள் கலை, அறிவியல் பட்டதாரிகளில் 15 சதவீதத்தினரும் பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளில் 25 சதவீதத்தினரும் மட்டுமே பணிக்குத் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் என்ன? கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்படும் கல்வி எந்த நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது?
நாம் வழங்கும் கல்வி ஒருவரின் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய கல்வியாக இருக்கிறதா? நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கக்கூடிய மனித வளமாக ஒருவரை மாற்றக்கூடிய கல்வியாக இருக்கிறதா?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை ஆராய்ந்து பார்த்தால் தற்போதைய நிலைமை விளங்கும்.
இன்றைய கற்பித்தல் முறை
* இன்றைய கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் புத்தகங்களில் உள்ளவற்றை அப்படியே வகுப்பறைகளில் படிப்பித்து மாணவர்களை புத்தகப் புழு ஆக்குகிறார்கள்.
* இன்றைய கற்பித்தல் முறை மாணவர்களைத் தேர்வில் தேர்ச்சிபெற வைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.
* இன்றைய கற்பித்தல் முறையில் மாணவர்களின் செயலாற்றலை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
* இன்றைய கல்வி முறையில் தொழிற்கூடங்களின் ஈடுபாடு இல்லை.
* இன்றைய கல்வி முறையில் கற்றல்- கற்பித்தலில் புதிய பயிற்றியல் முறைகளை (innovative pedagogical approaches) மிகுதியாகப் பயன்படுத்துவதில்லை.
* இன்றைய கல்வி முறையில் பெரும்பாலும் செய்முறை வாயிலாக கற்பித்தல் நிகழ்வதில்லை.
பள்ளிப் படிப்பில் பிளஸ் 2 வரை படித்து தேர்ச்சி பெற்றவர்களுள் 13 சதவீதத்தினர் மட்டுமே உயர்கல்வி பெறுகிறார்கள் என்றால், அரசுக் கல்லூரிகளும் அரசுப் பல்கலைக்கழகங்களும் வேண்டிய அளவிற்கு ஊரகப்பகுதிகளில் இல்லை என்பதே காரணம். இந்த நிலையை மாற்றவே தனியார் கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகங்களும் அரசால் இசைவளிக்கப்பட்டு தொடங்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளும் தனியார் பல்கலைக்கழகங்களும் நகர்ப்புறங்களிலேயே தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் கல்லூரிகளுக்கும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அரசு மானியம் வழங்கப்படாமையால், கல்விச்செலவை ஈடுகட்ட அவை விதிக்கும் கட்டணம் கூடுதலாக உள்ளது.
இந்த நிலை மாறி பட்டதாரிகள் பணிக்குத் தகுதி உடையவர்களாக வேண்டுமெனில், அரசு நிறுவனங்கள் உள்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் திட்டங்களில் பல்வேறு புதிய, நவீன முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
முதலில், தனியார் நிறுவனங்களுக்கு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மானியமாக வழங்கும் திட்டத்தையும், ஆய்வுக்கூட நிதி உதவிகளையும் அரசு நிறுவனங்களுக்கு வழங்குவதுபோல வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தனியார் நிறுவனங்களின் கல்வித்தரம் உயர வழி பிறக்கும். தனியார் நிறுவனங்களை அரசு கட்டுப்படுத்தவும் அது வழிவகுக்கும்.
No comments:
Post a Comment