'தமிழக அரசு ஊழியர்கள், நவ., மாத சம்பளம் வாங்க, 'ஆதார்' எண்ணை இணைக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பள பட்டியல், இன்று தயார் செய்யப்பட்டு, கருவூலங்களுக்கு அனுப்பப்படும். இந்த நிலையில், 'ஆதார் எண் அல்லது ஆதார் எண்ணுக்கு விண்ணப்பம் செய்ததற்கு பெற்ற ஒப்புகை ரசீதை, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலரிடம், இன்று அளிக்க வேண்டும்' என, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில், 'நவ., மாத சம்பளம் அளிப்பது தாமதமாகும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அச்சம்
'ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள பட்டியலிலும், ஆதார் எண் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதற்காக, அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது' என, சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்த அரசு ஆணையை, ஊழியர்கள் பார்க்கும்படி வெளியிடவில்லை. இது, அரசு ஊழியர்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.உயர்க்கல்வித் துறையின் சம்பள பட்டியல் தயார் செய்யும் அலுவலர் இது பற்றி கூறியதாவது:ஆதார் எண் அட்டைக்கான நகலை சமர்ப்பிக்க வேண்டும். நகலை சரிபார்க்க, உண்மை நகலை இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகையை அளிக்க வேண்டும். ஆதார் எண்ணை, ஒவ்வொரு ஊழியரின் இணையதள கணக்கில், பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சுற்றறிக்கை அனுப்பிஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.'அரசின் திட்ட பயன்களை பெறக்கூட, ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், சம்பளம் பெறுவதற்கு ஆதார் எண்ணை, தமிழக அரசு கேட்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்' என, அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.
காஸ் மானியத்திற்கும்...சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களிடம், 'ஆதார்' எண் தருமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.
மத்திய அரசு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, ஜன., மாதம் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்; அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் வரவு வைக்கும்.
'நேரடி மானிய திட்டத்தில் இணைய, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அப்போது அறிவித்தன. இதனால், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்கள், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்திருந்த, ஜூன் மாதத்திற்குள், நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஆதார் எண் அளிக்கத் தேவையில்லை;
வங்கி கணக்கு எண் மட்டும் தாருங்கள்' என தெரிவித்து, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைத்தன. இந்நிலையில், மானிய திட்டத்தில் இணைந்து, ஆதார் எண் அளிக்காத வாடிக்கையாளர்கள், அதை சமர்ப்பிக்குமாறு, எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன.
விலக்குஇதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க, ஆதார் எண் அவசியம். சில மாதங்களுக்கு முன், ஆதார் எண்ணை பலர் பெறாமல் இருந்ததால், அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது, மானிய திட்டத்தில் இணைந்த பலர், ஆதார் அட்டை பெற்று வருகின்றனர். அதனால், ஆதார் எண் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதை அளிக்குமாறு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment