அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,074 துவக்கப் பள்ளிகள், 302 நடுநிலைப் பள்ளிகள், 147 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,621 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் உத்தரவிட்டது.
1,001 பள்ளிகளில் இல்லை
தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தினார்.
ஆனால், அரசு உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளிகளில் இதுவரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக, தற்போது, மாவட்டத்தில், 620 பள்ளிகளில் மட்டுமே, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பள்ளிகள் சுத்தமான முறையில் குடிநீர் வழங்கவில்லை.
இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் காலரா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, எடுக்கும் விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் மேற்கொள்ளாதது, மாணவ, மாணவியர்களின் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும்...
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் பள்ளிக்கு வழங்கப்படும் நிதியால், அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முடியாமல், நாங்கள் திணறி வருகிறோம். சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு மற்றும் ஊராட்சிகளின் துணையோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்" என்றார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி வழங்கி வருகிறோம். இந்த நிதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்.
No comments:
Post a Comment