திருவண்ணாமலையில், தனியார் பள்ளி மாணவி யின் கூந்தலை, ஆசிரியை வெட்டியதால், அவமானமடைந்த மாணவி, தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக, ஆசிரியை இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடியைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, திருவண்ணாமலையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த, 5ம் தேதி, வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளி விதிமுறை படி, முழுமையாக ஜடை பின்னாமல், கூந்தலை அலங்கரித்துச் சென்று உள்ளார்.
இது குறித்து, பள்ளி ஆசிரியை சுமதி, மாணவியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, மாணவி, தன்னுடைய கூந்தலின் அமைப்பு அப்படித்தான் எனக் கூறியுள்ளார். ஆனாலும், மாணவியின் விளக்கத்தை ஏற்காத ஆசிரியை சுமதி, மாணவியின் தலையில் இருந்த சிறிது முடியை, உடன் படிக்கும் மாணவர்களின் முன் வெட்டியுள்ளார். இதனால், மாணவி அவமானமடைந்தார்.
இதுகுறித்து, அவர், தன், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியை மீது, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம் என, மாணவியின் பெற்றோர் கூறினர். ஆனாலும், அவமானம் தாங்காமல், வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து, மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் கூறியதாவது:மாணவி மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணை அறிக்கையை, மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு அனுப்பியுள்ளேன். பிரச்னைக்கு காரணமான, இரண்டு ஆசிரியைகள் சுமதி மற்றும் தேவி ஆகியோர், பள்ளி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர், மேல்நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment