'பள்ளிக்கு வர, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேட்டைச் சேர்ந்த, செல்வி என்பவர், தாக்கல் செய்த மனு: மாணவி ஒருவரின் சாப்பாடு டப்பாவை திறந்து, சாப்பிட்டு விட்டதாக, அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், என் மகன் மற்றும், நான்கு மாணவர்கள் மீது, புகார் கூறப்பட்டது. சூனாம்பேடு போலீசிலும், புகார் அளிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த போலீசார், மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். போலீஸ் நிலையத்துக்கு அவர்களை அழைத்து சென்று, 'லாக்-அப்'பில் வைத்துள்ளனர். போலீஸ் நிலையத்துக்கு, நாங்கள் சென்றோம். எங்களிடம் எழுதி வாங்கி விட்டு, அவர்களை விடுவித்தனர். மாணவர்களை, பள்ளிக்கு செல்ல விடாமல், போலீசார் அச்சுறுத்துகின்றனர். இதனால், அவர்கள் பயந்து கொண்டு, பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டனர். எனவே, படிப்பை மாணவர்கள் தொடர, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாருடன் சேர்ந்து செயல்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: பள்ளிக்கு, மாணவர்கள் வருவது தடுக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள ஏதுவாக, மூன்று முறை வழக்கு விசாரணையை தள்ளிவைத்தும், எந்த பதிலும் வரவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால், மனுதாரரின் மகன் மற்றும் நான்கு மாணவர்கள் பள்ளிக்கு வருவதை, தலைமை ஆசிரியர் அனுமதிக்க வேண்டும். விசாரணை, 17ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment