குழந்தைகளை அடித்து வளர்த்தால்தான் ஒழுக்கமுடன் இருக்கும் என்பது பழைய காலத்து பெற்றோரின் பாலபாடம். அதற்காக, பழைய காலத்து பெற்றோர் அனைவரும் இப்படி இல்லை என்றாலும், பெரும்பாலானவர்களின் குழந்தை வளர்ப்பு அரிச்சுவடியில் இப்படித்தான் விதிகள் இருந்தன. காலம் மாறிவிட்ட பிறகு குழந்தைகளுக்கென தனி மருத்துவ படிப்பு, குழந்தை வளர்ப்பு முறை என இதில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் உருவாகினர்.
அதன்பிறகு வந்த விஞ்ஞான மற்றும் உளவியல் ரீதியிலான ஆய்வுகளும் பயமுறுத்தி வளர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை உணர்த்தின. ஆனாலும், சில பெற்றோர் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் அடித்து வளர்க்கும் விதியும் அடங்கியே உள்ளது என்று இன்றும் நம்புகின்றனர். நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றான மும்பை நகரம் இதில் முன்னணியில் உள்ளதை ஆய்வு ஒன்று எடுத்துக்காட்டுகிறது.
மும்பையில் 62 சதவீதம் பேர் குழந்தைகளை அடிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மூன்று ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு என்பதால் ஆறுதல்படவும் வழியில்லை. இவர்களில் 2 சதவீதம் பேர் குழந்தைகளை அடிப்பதை தவிர வேறு எந்த வகையிலும் கட்டுப்பாடு செய்யவே முடிவதில்லை என்று கூறியுள்ளனர். 60 சதவீதம் பேர் குழந்தைகளை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றும், 24 சதவீதம் பேர் இந்த முயற்சியில் தோல்வியடைந்து சோர்வடைந்து விடுவதாகவும் அடிப்பதற்கு காரணம் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, குழந்தைகளை அடிப்பவர்களில் 61 சதவீதம் தாய்மார்கள். தந்தையர் 29 சதவீதம்தான் என்கிறது அந்த ஆய்வறிக்கை. இப்படி கொடுமைக்கார பெற்றோர் தவிர மற்றவர்கள் குழந்தைகளை அணைத்து தூங்கவைப்பது, அவர்களுடன் சேர்ந்து அழுவதுபோல் பாவனை செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் சமாளிக்கின்றனர். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அவர்கள் சேட்டையை அடக்குவதற்கு பிரம்படி வைத்தியம்தான் லாயக்கு என்று கருதுவது அறியாமையை தவிர வேறில்லை. இதுபோல் படிப்பில் மார்க் குறைவு என்பதற்காக இந்த வைத்தியம் கொடுக்கும் பெற்றோர் போட்டிகள் நிறைந்த நகர வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றனர்.
பயமுறுத்தி வளர்க்கும் குழந்தைகள் சமுதாயத்தில் பழகுவதற்கும், சரளமாக பேசுவதற்கும் தயங்குகின்றன. இது அவர்களின் படிப்பு தொடங்கி வேலை வரை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையில் சிக்கி பிரச்னைகளை எதிர்கொள்ள அஞ்சுகின்றன என்று உளவியல் நிபுணர்களும், குழந்தை வளர்ப்பு ஆலோசகர்களும் கூறுகின்றனர்.
குழந்தைகளிடம் உள்ள திறமையை அறிந்து அவர்களுக்கு பெற்றோர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். குழந்தைகள் முதலில் ஹீரோவாக நினைப்பது பெற்றோரைத்தான். கண்மூடித்தனமான கண்டிப்பு மூலம் அந்த எண்ணத்தை கலைத்து விட்டால் எதிர்மறை பலன்கள்தான் மிச்சமாகும். அரட்டுவதை விட அரவணைப்புதான் அவர்களுக்கு தேவை.
No comments:
Post a Comment