உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி?'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள்,
இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease) எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்!பிழையாகிப் போன உணவுப் பழக்கம்!இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ''ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.தாண்டவமாடும் தைராய்டு!வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது அவசியம். தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். தவிர, மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம்.என்ன செய்ய வேண்டும்?தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்.. தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வறுத்த, பொரித்த, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இனிப்பை குறைத்தல் இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது மிக நல்லது. எக்காரணம் கொண்டும் உப்பை திறந்து வைக்க வேண்டாம். அதனால், உப்பில் உள்ள அயோடின் காற்றில் கரைந்துவிடும். முக்கியமாக, முளைகட்டிய பயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது'' என்றார் டாக்டர் பிரேமலதா.அம்மா... குண்டம்மா!பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?இதற்கு பதில் சொல்கிறார், மகப்பேறு சிறப்பு மருத்துவர் பிரபா. ''கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக 8 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். குழந்தையின் வளர்ச்சி வேண்டி இந்நேரத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவால் அதிகரிக்கும் எடை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. என்றாலும், முடிந்தவரை மாதத்துக்கு 1 முதல் 2 கிலோவுக்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பிறகும், பாலூட்டும் காரணத்தால் எடுத்துக்கொள்ளும் அதிக உணவு, உடல் எடையைக் கூட்டுவது இயல்பு. ஆனால், இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்துக்குப் பிறகும் சரி, மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சுகப்பிரசவம் எனில், குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் இருந்தும்... சிசேரியன் எனில் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்த பிறகும் உடற்பயிற்சியைத் தொடங்கலாம். ஆனால், பெண்கள் பலரும் பிரசவத்துக்குப் பிறகு கவனம் அனைத்தையும் குழந்தைக்குக் கொடுத்து, தங்கள் உடம்பை கவனிக்க மறக்கிறார்கள். பால் கொடுக்கும் தாய்க்கு வீட்டில் உள்ளவர்கள், 'பச்ச உடம்பு... நல்லா சாப்பிடணும்...’ என்று கூறி, தேவையான காய்கறி, பழங்களைவிட, தேவையற்ற நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை அதிகம் கொடுப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்யவிட மாட்டார்கள். ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் சரிவிகித உணவிலும், தகுந்த உடற்பயிற்சியிலும்தான்.
No comments:
Post a Comment