பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியை பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட வெளியிடங்களில் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சான்றிதழ் விபரங்களில் பிழை ஏற்படாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், தேர்வெழுதும் மாணவர்களின் விபரங்களை, ஆப்லைன் முறையில், தயார் செய்து வைத்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளியில் தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், சரிபார்த்துக்கொள்ளவும், பிழைகள் இருப்பின் தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் விபரங்கள் வெளியாட்களுக்கு கிடைக்கும் வகையில், பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட வெளியிடங்களில், இப்பட்டியலை கண்டிப்பாக தயார் செய்யக்கூடாது எனவும், பள்ளியில் மட்டுமே தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பட்டியல், தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment