தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்' புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது. இவை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்திற்கும் வழங்கப்படுகின்றன.
இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை நேரடியாக விற்க, ஆன்லைன் பதிவு துவங்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்வதற்கு, இணையதள வங்கி கணக்கு அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதும், புத்தகம் பதிவு செய்வோரின் இ - மெயில் முகவரிக்கு ரசீது வந்துவிடும்; இரண்டு நாட்களில், உரிய முகவரிக்கு புத்தகம் வந்து சேரும்.
முதலில் சுறுசுறுப்பாக செயல்பட்ட இத்திட்டத்தில் தற்போது, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால், புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகிறது. இது, மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பதிவு செய்தோர், தங்களுக்கு வர வேண்டிய புத்தகத்தின் நிலையை அறிய, பாடநுால் கழகத்தில் விசாரிக்க, விற்பனை பிரிவு உதவி இயக்குனர், 044 - 2821 5351; புத்தக பதிவு ரசீதில் உள்ள, 044 - 2827 5851 உள்ளிட்ட பல எண்கள் தரப்பட்டுள்ளன. இந்த எண்களை தொடர்பு கொண்டாலும், யாரும் பதில் தராததால் மாணவர்கள் தவிக்கின்றனர்.
No comments:
Post a Comment