மதுரை காமராஜ் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் தொடர்பான ஆவணங்கள், ரயிலில் நேற்று மாயமானது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இப்பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வு குழுவில் இடம் பெறும், செனட் உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கான தேதி முடிவு செய்யும் சிறப்பு சிண்டிகேட் கூட்டம், சென்னையில் அக்.,18ல், உயர்கல்வி செயலர் கார்த்திக் தலைமையில் நடந்தது.
இதில் பல்கலை பதிவாளர் விஜயன் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நவ.,30ல் செனட் தேர்தல் நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டது.
இதன்பின் அக்.,19 ல் நடந்த கூட்டத்தில், பதிவாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதுதொடர்பான ஆவணங்களுடன் பல்கலை அதிகாரிகள் அக்.,19ல் பாண்டியன் ரயில் மூலம் மதுரை வந்தனர். வரும் வழியில் சிண்டிகேட் கூட்ட ஆவணங்கள் வைத்திருந்த அதிகாரி ஒருவரின் பேக் மதுரையில் இறங்கியபோது மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து பல்கலை அதிகாரி முத்தையா ரயில்வே போலீசில் அளித்த புகாரில், ரயிலில் வந்த போது வயிற்று போக்கு காரணமாக பாத்ரூம் சென்றேன். அதனால் என் பேக்கில் வைத்திருந்த அலுவலகம் மற்றும் சிண்டிகேட் கூட்டம் தொடர்பான ஆவணங்களை தவறவிட்டேன்,என தெரிவித்துள்ளார்.
பதிவாளர் விஜயன் கூறுகையில், சிண்டிகேட் ஆவணங்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் கொண்டுவரப்பட்டது. அது காணாமல் போகவில்லை. புகார் கொடுத்தவர் அவரது பேக்கை காணவில்லை என தெரிவித்துள்ளார், என்றார்.
No comments:
Post a Comment