தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி அனைத்து அரசு பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடை காலமென்பதால் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. எனவே, பள்ளிகளின் கோடை விடுமுறையை ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்க மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டம்: பள்ளிக்கல்வி அமைச்சர் பா. பெஞ்ஜமின் தலைமையில், செயலர் சபிதா, கல்வித் துறை இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மாநாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிகள் திறக்கும் நாள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனினும் ஓரிரு நாளில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தெரிவித்தனர்.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா நலத் திட்டம்: நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதியன்று, பள்ளிகள் திறக்கும் போது அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கான விலையில்லா நலத் திட்டங்களுக்காக ரூ. 3,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது குறித்து திட்டமிடும் வகையில், பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், விலையில்லா புவியியல் வரைப்படம், விலையில்லா சீருடைகள் மற்றும் இதர மாணவர்கள் நலத்திட்ட பொருள்களும் வழங்குவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பா. பெஞ்ஜமின் அறிவுரைகள் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபுநாயர், தமிழ்நாட்டுப் பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மைதிலி கே. இராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, அரசு துணைச் செயலர் ராகுல் நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலவச பஸ் பாஸ் விண்ணப்பம் எப்போது?
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இலவச பயண அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகள் திறக்கும் நாள் முதல் ஒரு வாரம் வரை பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குள்ளாக மாணவர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment