500க்கு, 499 மதிப்பெண்கள் பெற்று, இரண்டு பேர், மாநில அளவில் முதலிடமும்; 53 பேர், இரண்டாம் இடமும்; 230 பேர், மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களில், 77 ஆயிரம் பேர், 100க்கு, 100 பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கு, 10.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; 10.12 லட்சம் பேர் பங்கேற்றனர். 4.64 லட்சம் மாணவர்கள்; 4.84 லட்சம் மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த, 10 ஆண்டுகளின் வரலாறு தொடரும் வகையில், இந்த ஆண்டும், மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 91.30 சதவீதமும், மாணவியர், 95.90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.34 லட்சம் மாணவ, மாணவியர், 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
முக்கிய பாடங்களில், 76 ஆயிரத்து, 794 பேர், 100க்கு, 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழில் யாரும், 100க்கு, 100 வாங்கவில்லை. மற்ற மொழிப் பாடங்களில், 73 பேரும்; ஆங்கிலத்தில், 51 பேரும், 100க்கு, 100 பெற்றுள்ளனர்.முக்கிய பாடங்களில், கணிதத்தில், 18 ஆயிரத்து, 754 பேர்;
அறிவியலில், 18 ஆயிரத்து, 642 பேர்; சமூக அறிவியலில், 39 ஆயிரத்து, 398 பேர், 100க்கு, 100 எடுத்துள்ளனர். தமிழை முதல் மொழியாக எடுத்து ஆங்கில வழியில் படித்த, இரண்டு பேர், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
விருதுநகர் நோபல் மெட்ரிக் பள்ளி மாணவர் சிவக்குமார்; நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி., எக்செல் மெட்ரிக் பள்ளி மாணவி பிரேம சுதா ஆகியோர், 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில், முதலிடம் பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில், நான்கு பேர் உட்பட, 53 பேர், 498 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம் இடம்பெற்றுள்ளனர். 230 பேர், 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இவர்களில், 17 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். புதுச்சேரியில், மூன்றாம் இடம் பெற்றவர்களில், நான்கு பேர் பிரெஞ்ச் மொழியை முதன்மை மொழியாக எடுத்தவர்கள்.
கடந்த ஆண்டு தேர்வில், 773 பேர், முதல், மூன்று இடங்களையும்; இரண்டு லட்சம் பேர், ஏதாவது ஒரு பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண்களும் எடுத்தனர். இந்த மதிப்பீட்டு முறைக்கு, கல்வியாளர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதனால், 'சென்டம்' பெற்றவர்களின் எண்ணிக்கையும், மாநில, 'ரேங்க்' பெற்றவர்களின் எண்ணிக்கையும், மூன்றில், ஒரு பங்காகக் குறைந்துள்ளது.
அரசுப் பள்ளிஅரசுப் பள்ளியை பொறுத்தவரை, கோவை மாவட்டம், கோட்டூர் மலையாண்டிபட்டினத்திலுள்ள, எம்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜனனி, ஆங்கில வழியில் படித்து, 498 மதிப்பெண்ணுடன், மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இது தவிர அரசுப் பள்ளி மாணவர் யாரும் மாநில, 'ரேங்க்' பெறவில்லை.
மாநில 'ரேங்க்'கில் சறுக்கும் தமிழ் வழி மாணவர்கள்: இந்த ஆண்டு மாநில, 'ரேங்க்' பெற்ற, 285 பேரில்,மூன்று பேர் மட்டுமே, தமிழ் வழியில் படித்தவர்கள். தேனி மாவட்டம், கூடலுாரில் உள்ள என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவஸ்ரீ, 498 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடமும்; திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரீஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி மரியா மடோனா, கரூர் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி ஆகியோர், 497 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். இந்த மூன்று பேர் மட்டுமே தமிழ் வழியில் படித்து மாநில, 'ரேங்க்' பெற்றவர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே மாநில அளவில் சாதிப்பதற்கான, 'டிப்ஸ்'களை ஆசிரியர்கள் கொடுத்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக எழுத்துப் பயிற்சி எடுத்தேன். பெற்றோரும் ஒத்துழைப்பு அளித்தனர். வீட்டிலே எனக்கு தேர்வு வைத்தனர். மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பேன். பார்க்கும் இடமெல்லாம், மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என, எழுதி வைப்பேன். அந்த கனவு நனவாகி விட்டது.
ஆர்.சிவக்குமார்
நோபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பெரியவள்ளிக்குளம், விருதுநகர் மாவட்டம்
பள்ளியின் விடுதியில் தங்கி படித்ததால், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஊக்கமளித்தனர். நான், 495 மதிப்பெண் பெறுவேன் என்று, எதிர்பார்த்தேன். ஆனால், மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டராக வேண்டும் என்பதே லட்சியம். காலை, 5:௦௦ மணிக்கு எழுந்து படிப்பேன்; இரவு, 12:00 மணி வரை படிப்பேன். பாடங்களை, உடனுக்குடன் படித்தால், அதிக மதிப்பெண் எடுப்பதில் சிரமம் இருக்காது.
பிரேம சுதா
எஸ்.ஆர்.வி., எக்செல் மெட்ரிக் பள்ளி,
குறுக்கபுரம், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்
No comments:
Post a Comment