மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், 2ம் வகுப்புக்கும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. தமிழகத்தில், பல்வேறு வகை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டம் மற்றும் மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பிற மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளிலுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களின் சில பள்ளிகளில், அருகில் உள்ள மாநில மாணவர்கள் படிக்கும் வகையில், பிற மொழி வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
ஆனால், தமிழக அரசு, '2006ல், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும்' என, அரசாணை பிறப்பித்தது. கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு வரை அனைத்து பிற மொழி பள்ளிகளிலும், தமிழ் கட்டாய பாடமானது.
இதற்கு எதிர்ப்பு எழுந்து, சிறுபான்மை மொழி பாதுகாப்பு சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழில் தேர்வு எழுத விலக்கு பெற்றனர். ஆனாலும், பிற மொழி பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் பாடத் திட்டமான, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க, 2014ல், தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கு மட்டும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக அறிமுகமானது.
இந்த ஆண்டு, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், 2ம் வகுப்புக்கும் தமிழ் கட்டாய பாடமாகிறது. அதற்கான தமிழ் புத்தகங்கள், தமிழக பாடநுால் மற்றும் கல்வி பணிகள் கழகம் மூலம், பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படிப்படியாக அறிமுகமாகும் தமிழ் பாடம், 2024 - 25ல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தமிழ் கட்டாய பாடமாகும்.
No comments:
Post a Comment